Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இலங்கை முற்போக்கு தமிழ் இலக்கிய பிதாமகர் தலாத்துஓயா கே. கணேஷ்

1931 லேயே இவர் ஆங்கிலத்தில் சி.வி.வேலுப்பிள்ளை  “விஸ்மாஜினி” எனும் பெயரிலும்  1948ல் “வழிப்போக்கன்” எனும் பெயரிலும் கவிதை நாடக ஆங்கில நூல்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் கவியரசர் ரவீந்தரநாத் தாகூர், கவிக்குயில் சரோஜினி தேவி போன்ற இந்திய கவிஞர்களின் கவிதைகளால் உந்தப்பட்டு ஆங்கில  கவிதைகளைப் படைத்தவர்.

1963ஆம் ஆண்டு Afro Asian Writers Bureau (ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் சங்கம்) தொகுத்து வெளியிட்ட ஆங்கில கவிதை நூலில் இலங்கையிலிருந்து ஆறு கவிஞர்களின் ஆங்கில கவிதைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.  வண.மஹிந்த தெரோ (கவிதை:  Payesr of Independence) ஜே.பி.விக்கிரமதிலக்க (கவிதை : Awake Sinhala Youth) சி.வி.வேலுப்பிள்ளை (கவிதை: Tea Pluckers) ஈவா ரணவீர (கவிதை: down Them) வண.சார்ல்ஸ் வில்லியம் டி சில்வா (கவிதை: A petition)  என்போரே இந்த கவிஞர்களாவர். இவர்களுள் ஒரே ஒரு தமிழ் கவிஞராகவும் அவரது கவிதை மலையக தோட்டத் தொழிலாளிகளின் உழைப்பை பற்றியதுமாக அமைந்தமை சி.வி.வேலுப்பிள்ளையின் முக்கியத்தவத்தை காட்டி நிற்கிறது.

சி.வியின் மக்கள் பற்றிய பார்வைக்கு அவரே எழுதிய அழகிய ஆங்கில வரிகள் பின்வருமாறு அமைந்தது.

From time to time 
From the highway 
I shall strike 
Upon my harp 
And sing my song
I sing of Lanka’s men 
Born of 
the Paddy field 
The patnas
The tea 
And rubber land 
Yes, the men I love 

அதனைத் தமிழாக்கம் செய்த கவிஞர் சக்தீ பால அய்யா இவ்வாறு எழுதுகிறார்.

நாழிக்கு நாழி 
வீதியில் நின்று – என் 
யாழினை எடுத்து 
கீதத்தை இசைப்பேன்
ஈழத்தின் மானுடர்க்காய்
வயல் புல் வெளிகளிலும்
தேயிலை ரப்பர் 
தோட்டங்களிலும் 
பிறந்திட்ட மானுடர்க்காய்
ஆம், நான் காதலிக்கும் அவர்களுக்காய்

உண்மையில் மக்களை, உழைப்பாளர்களை காதலித்த அவரது எழுத்துக்களின் வரிசையிலே 1954ஆம் ஆண்டு வெளிவந்த  In Ceylon Tea Garden என்ற ஆங்கில கவிதைநூல் இவருக்கு பெரும் புகழை ஈட்டித்தந்தது.  1969 ஆண்டு In Ceylon tea Garden நூலின் தமிழாக்கம் இலங்கை தேயிலைத் தோட்டத்திலே’ .சி.வி வேலுப்பிள்ளை அவர்களை தமிழ் இலக்கிய சூழலில் பிரபலபடுத்தியது. இந்த மொழியாக்கத்தழதுக்கு சொந்தக்காரரான சக்தீ பால அய்யா வும் இந்த அரசியல், இலக்கிய குரலுக்கு உரியவராக உள்ளார். எனினும் கால ஒழுங்கில் அவருக்கு முன்பதாக கே. கணேஷ் பற்றி பார்க்க வேண்டியுள்ளது.

கல்விப் புலமையோடு இலக்கிய உலகுக்குள் பிரவேசித்த சி.வி.வேலுப்பிள்ளை போன்றே  இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியை ஊடறுத்து வந்தவர் கே.கணேஷ். ஆதலால் வாய்மொழி பாரம்பரியத்தில் இருந்து  தாம் பெற்ற அனுபவத்தை நவீன இலக்கிய வடிவங்களில் உலாவவிட்டவர்கள் சி. வி யும் கே. கணேஷ் உம் எனலாம்.

இவர்களது ஆங்கிலப்புலமை மலையக இலக்கிய சூழலை புதிய செல்நெறிக்கு இட்டுச்சென்றது. இக்காலகட்ட பாடுபொருள் எல்லாமே தொழிலாளர்களின் வேலைச்சுமைகளையும், அவர்களது வாழ்விட வசதியின்மைகளையும், அவர்கள் மீதான சுரண்டல்களையும் பாடும் அவலச்சுவை கொண்டவை என்பதனை மறுப்பதற்கில்லை. என்றாலும் எம்மக்கள் இந்த துயரங்களில் இருந்து மீண்டு எழுவர் எனும் நம்பிக்கை இந்த காலகட்ட படைப்புக்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆரம்ப காலத்தில் கவிஞராக அறிமுகமாகி பின்னாளில் மலையகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலேயே மொழிபெயர்ப்புத்துறையில் ஆழத்தடம் பதித்த தலாத்து ஓயா கே.கணேஸ் அழகு தமிழில் எழுதிய கவிதைகளில் இந்த கவிதை முக்கியத்துவம் மிக்கது.

வான் நோக்கி உயர்கின்ற மலைகள் யாவும்
மதுவொக்கும் எனப்புகழும் தேயிலைகள் மேவும்.
கான் ஒழித்துச் சோலை நிகராக இதைச்செய்தோர்
கடல் கடந்து தொழிலாளர் வியர்வை நீர் பெய்தோர்
உழைப்போர் கள் இருக்கின்ற வாழக்கையோதாழ்வு
உழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு
மழைக்காற்று மதியாது உதிர்க்கின்ற மேல் நீர்
மனம் குளிர நாமுண்ணும் ஒரு கோப்பை தேநீர்
கணேஷ், கருப்பண்ணபிள்ளை (1920.03.02 – 2004.06.05) கண்டி, அம்பிட்டி, தலைப்பின்னாவயைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை கருப்பண்ணபிள்ளை; தாய் வேளூரம்மா. சித்திவிநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தன் ஆரம்பக்கல்வியைத் தோட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள Baptist Mission பெண்கள் கல்லூரியில் சிங்களமொழி மூலமும் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் ஆங்கிலமொழி மூலமும் பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார்.

தமிழ்மொழியைத் தனது தாயார் மூலம் வீட்டில் கற்றுத் தெளிந்துள்ளார். 1934 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரம் அரசரின் உறவினரான சேத்தூர் ஜமிந்தார் பாண்டித்துரை தேவர் அவர்களின் ஆதரவுடன் தொடங்கபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் சிலகாலம் கல்வி பயின்றவர்.

இவர் தனது பன்னிரண்டாவது வயதில் (1932) பாடசாலைக் காலத்தில் எழுத்து முயற்சிகளை ஆரம்பித்த போதும் ஆனந்தபோதினியில் (தமிழ்நாடு) எழுதிய ‘அறம் செய்ய விரும்பு’ கட்டுரையினூடாகவே எழுத்துலகில் பிரவேசித்தார். தொடர்ந்து சித்தார்த்தன், கலாநேசன், கே.ஜி, மலைமகள், கணேசு ஆகிய புனைபெயர்களில் மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சக்தி, ஹனுமான், தென்றல் போன்ற பல ஏடுகளினூடாக எழுதினார்.

இவர் அதிகளவு பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழ்மொழிக்கு மொழிபெயர்த்தார். அத்துடன் ஆசாபாசம், சட்டமும் சந்தர்ப்பமும் உட்பட 7 சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் என பல்துறைகளில் கால் பதித்தார். இவரது கவிதைகள் நவசக்தி, லோகசக்தி போன்ற தமிழக இதழ்களிலும் வெளிவந்தன.

1940களில் மணிக்கொடி இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார். இவர் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த முன்னிலையில் இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார்

சுவாமி விபுலானந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராகக் கணேஷ் விளங்கினார். இவர் தீண்டத்தகாதவன் (முல்க்ராஜின் ஆங்கிலப் புதினம் Untouchables (1947) , குங்குமப்பூ (1956, கே. ஏ. அப்பாசின் புதினம்), அஜந்தா (கே. ஏ. அப்பாசின் புதினம்), ஹோசிமின் கவிதைகள் (1964), லூசுன் சிறுகதைகள் போன்ற நூல்களை மொழிபெயர்ப்புச் செய்தார்.

இவரின் பணிகளுக்காக இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளதோடு, இலக்கியச் செம்மல் (1991), கலாபூஷணம் விருது (1995), இருமுறை விபவியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதுகள் , கனடாவின் ‘இலக்கியத் தோட்டத்தின்’ 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.இந்த விருதினை வென்ற ஒரே மலையக எழுத்தாளராக கே. கணேஷ் மாத்திரமே இதுவரை உள்ளார்.

இடது சாரி சிந்தனையாளரான இவர் “பாரதி” எனும் இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டவர். இவர் ஒரு செயற்பாட்டு அரசியல்வாதியாக அடையாளப்படுத்தப்படாத போதும் தனது இடதுசாரி அரசியல் சிந்தனையுடன் இலக்கிய உலகில் சஞ்சரித்தவராக சமகால அரசியல் குரலாக மலையக இலக்கியத்தின் ஊடு தனது குரலை வெளிப்படுத்தயவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *