Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உரிமை எங்கே?” என கதை எழுதி உரிமைக் குரல் எழுப்பிய செந்தூரன்

மல்லியப்புசந்தி திலகர்

இளைஞர் தளபதி இர.சிவலிங்கத்தின் இலக்கிய வழி அரசியல் பங்களிப்பை பார்த்ததுபோலவே அவருடன் கூடவே மறக்க முடியாதவராக வருபவர் செந்தூரன். சிவா – செந்தூரன் இரட்டையர்களாகவே தமது கல்விப்பணியினூடாகவே இலக்கிய அரசியல் களங்களில் செயற்பட்டார்கள்.

கண்டி மாவட்டத்தின் கலஹா பகுதியில் மந்திரமலை எனும் தோட்டத்தில் 30.08.1936 ஆம் ஆண்டு பிறந்தவர் துருச்செந்தூரன். ஆரம்ப கல்வியை கலஹா பகுயிலேயே கற்றவர். உயர் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் பயின்று பட்டப்படிப்பை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் தொடர்ந்து இருந்தார்.

ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரியிலும் பின்னர் ஹைலன்ட் கல்லூரியிலும் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் பணியாற்றினார். மாத்தளை, பண்டாரவளை பகுதியிலும் கூட கல்வித்துறையில் பணியாற்றியவர். இர. சிவலிங்கம் போன்றே மலையகம் – தமிழகம் என்ற இரட்டை வாழ்வு இவருடையதும். இருவரும் சமகாலத்தவர்கள் என்றவகையில் ஒரே செல்நெறியில் பயணம் செய்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி போதிப்பதோடு தமது ஆசிரியத்துவத்தை நினைவு செய்து விடாமல் கலை, இலக்கியம், அரசியல் என சமூக எழுச்சி கருத்துகளை விதைத்தவர்கள் இந்த இரட்டையர்கள்.

1959ல் தமிழகத்தில் இருந்து வெளிவந்த “கல்கி” எனும் ஜனரஞ்சக சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் “உரிமை எங்கே? “ என்ற தலைப்பில் எழுதிய சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இங்கு பரிசு என்பதற்கு அப்பால் இலங்கை மலையக விடயத்தை தமது கதை மூலம் தமிழ் நாட்டு வாசகர் மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது அவதானிக்கத்தக்கது. இன்றும் கூட மலையக மக்களை பற்றி தமிழகம் அறிந்து வைத்திருப்பது குறைவு என குறைகாணும் நிலையில் 1960 களிலேயே தமது முயற்சியை மேற்கொண்டுள்ளமையே கவனத்திற்குரியது. அதுவும் “ கல்கி” போன்ற ஜனரஞ்சக இதழ் ஊடாக எழுதும்போது அது சாதாரண வாசகனுக்கும் மலையகம் பற்றிய தகவலைக் கொண்டு சேர்ப்பதாக இருந்திருக்கும். கதையின் தலைப்பு கூட இலங்கையில் பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் உரிமை பற்றியது. எனவே இலங்கையில் இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் குடியுரிமை மறுக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டுள்ளனர் என்கின்ற செய்தியை பூர்வீக நாடான இந்தியாவுக்கு கொண்டு செல்ல இலக்கியத்தை ஊடகமாக கையாண்டுள்ளார்.

தொடர்ந்து “நடுக்கடலில்”, “என்ன செய்து விட்டேன்”, “சாமிக்கடன்” போன்ற இவரது சிறுகதைகள் இலங்கை முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. சிறுகதை தொகுப்புகளிலும் கூட வெளிவந்துள்ளன.

நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தில் நாடகமும், அரங்கியலும் என்ற துறையில் பட்மேற்படிப்பு டிப்ளோமா கல்வியைக் கற்றதோடு அதனை நடைமுறை ரீதியாக தனது சக தோழர்கள் மாணவர்கள் ஊடாக மக்கள் மயப்படுத்திய பெருமை செந்தூரனுக்குரியது. குறிப்பாக தனது சகாவான வி.டி.தர்மலிங்கத்துடன் இணைந்து அவர் மேற்கொண்ட மேடை நாடக முயற்சிகள் அரசியல் முக்கியத்துவமிக்கவை.

மலையகத் தோட்டப்பகுதிகளில் ஆடப்பட்டுவரும் பாரம்பரிய கலையான காமன் கூத்தினை இன்றைய இளைஞர்கள் மேடை நாடக வடிவத்தில் பல இடங்களிலும் மேடை ஏற்றி வருகின்றனர். தமிழகத்தில் செம்மொழி மாநாட்டிலும் இலங்கையின் பல வேறு பல்கலைக் கழகங்களிலும் பொது மேடைகளிலும் கூட ஊர்வெளியே ஆடப்படும் காமன் கூத்து மேடை நாடகம் போன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. ஓர் பாரம்பரிய கலையை, வீதிகளில் ஆடப்படும் நெடுங்கதையை நவீனமயப்படுத்தி நாடக வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்தவர் திருச்செந்தூரன் எனும் நாடக ஆசானே.

மலையகத்தில் பல கற்றறிவாளர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் கவிஞர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய பெருமை இவருக்குரியது. இவர்களுடைய மாணவர்கள் பரிசு போட்டிகளில் பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.வாமதேவன், சி.நவரட்ணம், பீ.மரியதாஸ், தை.தனராஜ், எஸ்.விஜயசிங், வ.செல்வராஜ், ஆர்.மெய்யநாதன், ஏ.எஸ்.சந்திரபோஸ் எனும் வரிசையை கல்வித்துறையில் செந்தூரனது மாணவர்களாக அடையாளப்படுத்த முடியும். மலையக எழுத்துத் துறையின் ஆளுமைகளான விளங்கும் சாரல்நாடன், மு.சிவலிங்கம், பி.முத்தையா,கவிஞர் க.ப.லிங்கம், பத்திரிகையாளர் பானா தங்கம் போன்றவர்கள் திருச்செந்தூரனின் மாணவர்கள்.

வி.டி.தர்மலிங்கம், பெ.சந்திரசேகரன்,அ.லோரன்ஸ், எஸ்.விஜயகுமாரன் எனும் மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களின் அரசியல் ஆளுமைகளின் பின்னால் திருச்செந்தூரன் எனும் ஆளுமை இருப்பது மறுக்க முடியாத உண்மை. தமது மாணவர்களை அரசியல் ரீதியான கருத்துருவாக்க சிந்தனையை விதைத்து வந்துள்ளார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே தமது நண்பர் இர.சிவலிங்கம் அவர்களுடன் இணைந்து மலையகப் பகுதிகளுக்குச் சென்று இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றியவர். திருவள்ளுவர் நற்பணி மன்றம், மலைநாட்டு வாலிபர் சங்கம் மலையக, இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் ஊடாக இளைஞர்களை ஒருங்கிணைத்து மலையக மாற்றத்திற்கு உழைத்தவர். இதன் போது வி.டி. தர்மலிங்கம் எனும் ஆளுமையும் பெரும் பங்காற்றியுள்ளார்.

இர.சிவலிங்கம் போன்றே அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான செந்தூரனும் பல இடமாற்றங்களுக்கு உள்ளனர். ஆனாலும் அத்தகைய இடமாற்றங்களை தனது இடராக கருதாமல் செல்லும் இடங்களில் இளைஞர்களை கல்வி, கலை, இலக்கிய, அரசியல் விடயங்களில் ஆளுமைகளை உருவாக்குவதில் அக்கறை காட்டியுள்ளார். அந்தவகையில் மாத்தளை பகுதியில் கடமையாற்றியபோது மாத்தளை எனும் அடைமொழியுடன் சோமு, கார்த்திகேசு, மலரன்பன், வடிவேலன், செல்வா, சிவஞானம், எனும் ஆளுமைகளின் உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்தவர்.

இவர்களோடு இணைந்து மலையகத் தமிழரின் பண்பாட்டு கலையினை கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அரங்கேற்றியதுடன் மாத்தளை கார்த்திகேசு தயாரித்த “அவள் ஒரு ஜீவநதி” என்ற தமிழ் திரைப்படத்தில் பாதிரியாராக பாத்திரமேற்று நடித்து முள்ளார். 1980 களில் தாயகம் திரும்பியவராக தமிழகம் சென்றவர், நீலகிரி மாவட்டத்தில் மலையகத் மலையக  தமிழர்களின் விடியலுக்காக மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் எனும் அமைப்பின் ஊடாக இர.சிவலிங்கம், அருட்பணி .அல்போன்ஸ், ஆகியோருடன் இணைந்து 1984 முதல் 16 ஆண்டுகளாக மன்றத்தின் ஊடாக பணியாற்றி 31/03/2001 அன்று திருச்சியில் காலமானார்.

நேரடி அரசியலாளராக களமிறங்கி செயற்படாதபோதும் தமது சிந்தனை, செயற்பாடுகளின் ஊடாக மலையகத்தில் கல்வி, கலை, இலக்கிய, அரசியல் ஆளுமைகளை வளர்த்தெடுப்பதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர் திருச்செந்தூரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *