Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நடந்தது “நாடு கடத்தலே”

( சிறிமாவின் அறிக்கை தொடர்கின்றது…) 

எதிர் கட்சி தலைவருடன் கலந்தாலோசனை

இந்திய பிரச்சினையானது கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று கையாண்டு தீர்க்கப்படவேண்டிய தீவிரமான தேசிய முக்கித்துவம் வாய்ந்ததொன்றாகும் என்று நான் எப்போதும் கூறுகின்றேன். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து காலத்திற்கு காலம் இப்பிரச்சினையோடு மிக நெருக்கமாகத் தொடர்புப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் டட்லி சேனநாயக்கவுடன் பல தடவை நான் இதுவிடயம் குறித்து கலந்துரையாடியுள்ளேன். இந்த விடயம் தொடர்பாக நான் அவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது அவர் காட்டிய ஒத்துழைப்பிற்காக நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் நாட்டை விட்டு புறப்பட்டு செல்வதற்கு முன்னர் இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை நாடு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இந்த நாட்டின் பிரசையாக நாம் ஏற்றுக்கொள்ள கொள்ளக்கூடிய, இந்திய வம்சாவளயினரின் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் நாம் ஓர் உடன்பாட்டை எட்டியிருந்தோம்.இந்தக் குழுவில் டட்லி சேனநாயக்கவை கலந்து கொள்ளுமாறு நான் அழைப்புவிடுத்தேன்.அதை அவர் ஏற்றுக்கொண்டார்.ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளது தலைவர்களதும் ஒத்துழைப்பினை நான் கோரியிருந்தேன்.

ஒக்டோபரில் நான் நாட்டைவிட்டு புறப்படும் முன் இப்பிரச்சினை தொடர்பாக அவர்களின் கருத்துகளை பெறுமுகமாக என்னைச் சந்திக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். அவர்களில் அனேகமானோரை சந்தித்து  கலந்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினர் அனைவரும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படவேண்டும் என்பது முதல் அவர்கள் அனைவருக்கும் இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது வரையில் அவர்களது கருத்துகள் பலதரப்பட்டதாக அமைந்திருந்தன. பொருளாதார ரீதியாக இலங்கையில் வைத்து பராமரிக்கக் கூடியவர்களை வைத்துக்கொண்டு ஏனைய அனைவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எனது அமைச்சானது “உடரட்ட ஜாதிக்க பெரமுனவுடன்” ( மலைநாட்டு தேசி முன்னணி) இது தொடர்பாக கலந்தாலோசித்து அவர்களது கருத்துகள் புது டெல்லியில் நான் மேற்கொண்ட நிலைப்பாட்டிற்கு அமைவானதாய் இருந்தது என்பதை நான் அறிவேன்.

புதுடில்லியில் இந்திய பிரதமரோடு ஒக்டோபர் 24 ஆம் திகதி ஆரம்பித்த எனது பேச்சுவார்த்தை ஆறு முழுநாட்கள் நீடித்தது. இந்திய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரிக்கும், அவருடன் பேச்சுக்களின் போது இணைந்து கொண்ட ஏனைய அமைச்சர்களுக்கும், எந்த நேரத்திலும் அல்லது பிந்திய இரவிலும் சில வேளைகளில் காலையில் குறுகிய நேரங்களிலும் எமது தூதுக்குழுவை சந்திக்க விருப்பம் தெரிவித்து குறுகிய ஆறு நாட்களுக்குள் இப்பேச்சுவார்த்தையை பூர்த்தி செய்ய உதவிய இந்திய அதிகாரிகளுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இரு அரசாங்கங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கௌரவ செனட்டர்கள் படித்திருப்பார்கள். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து சுருக்கமாக நான் கருத்துரைக்கிறேன்.
இலங்கையில் உள்ள எல்லா இந்திய வம்சாவளியினதும் எதிர்காலமும் நிலையும் இந்த ஒப்பந்தம் மூலம் இறுதியாக தீர்மானிக்கப்படவுள்ளது. இம்மக்களுள் 150000 ஆட்கள் குறித்து தீர்மானமொன்று எட்டப்படவில்லை. அவர்களுடைய நிலையும் விரைவில் தீர்மானிக்கப்படும்.

இவ்வொப்பந்தம் இலங்கையில் உள்ள கிட்டத்தட்ட 975000 இந்திய வம்சாவளியினர் தொடர்பானதாகும். சட்டத்திற்கு எதிராக இங்கு குடியிருப்போரும் அனுமதிக் காலத்தின், பின் தங்கியிருப்போரும், இந்திய கடவுச்சீட்டை வைத்திருப்போரும், இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும் திருப்பி அனுப்பப்படவேண்டியவர்களாவர்.

1953 ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட இந்திய நாட்டவர்களின் எண்ணிக்கையுடன் அவர்களது இயற்கை அதிகரிப்பு சேர்க்கப்பட்டு, இலங்கை பிரசாவுரிமை பெற்றுக் கொண்டோரையும் நிரந்தரமாக நாட்டைவிட்டு செல்வோரையும் கணக்கில் எடுத்து இந்தியக் கடவுச்சீட்டு உள்ளவர்களையும் கழித்து ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட 975000 என்ற எண்ணிக்கை கணிக்கப்பட்டது. 1964 செப்டெம்பர் 20 ம் திகதி அன்று இலங்கையில் உள்ள இந்திய சனத்தொகை எவ்வாறு கணிக்கப்பட்டது என்பதை விளக்கும் கூற்றை நான் சபாபீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். 1003269 என்ற எண்ணிக்கையில் இருந்து கடவுச்சீட்டு உள்ளோரின் எண்ணிக்கையை கழித்து மிகுதியான 975000 என்ற எண்ணிக்கையே, கலந்துரையாடலின் விடயப் பொருளாக அமைகிறது.
விரைவில் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டிய 150000 பேரைத் தவிர்த்து 525000 பேரும் அவர்களுடைய இயற்கை அதிகரிப்பும் 15 வருடங்களில் கட்டாயமாக தாயகம் அனுப்பப்படவேண்டும். அதே காலப்பகுதியில் 300000 பேருக்கு அவர்களுடைய இயற்கை அதிகரிப்புடன் பிரசாவுரிமை வழங்கப்பட வேண்டும். பிரசாவுரிமை வழங்குதல் தாயகம் திருப்பி அனுப்பப்படுவோர் விகிதாசாரம் 3: 5.25 ( மூன்றுக்கு ஐந்தேகால்) ஆக இருக்கும்.

( சிறிமாவின் அறிக்கை தொடரும்)

இந்தப்பகுதியில் சிறிமா பண்டாரநாயக்கா குறிப்பிடும், பின்வரும் குறிப்பு முக்கியமானது.

//இவ்வொப்பந்தம் இலங்கையில் உள்ள கிட்டத்தட்ட 975000 இந்திய வம்சாவளியினர் தொடர்பானதாகும். சட்டத்திற்கு எதிராக இங்கு குடியிருப்போரும் அனுமதிக் காலத்தின், பின் தங்கியிருப்போரும், இந்திய கடவுச்சீட்டை வைத்திருப்போரும், இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும் திருப்பி அனுப்பப்படவேண்டியவர்களாவர்.// எனும் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நடந்தது “நாடு கடத்தலே” என்பது தெளிவாகிறது.

( தொடரும் …)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *