Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிறிமா செய்த திட்டம்

இலங்கை – இந்தியஅரசாங்கங்கள்செய்துகொண்டஒப்பந்தத்தின்முக்கியஅம்சங்கள் ( சிறிமாவின் அறிக்கை தொடர்ச்சி )

இலங்கை பிரசாவுரிமை வழங்கப்பட உள்ளவர்களின் பெயர்களையும், இந்தியாவுக்கு (தாயகம்) அனுப்பப்படவுள்ளவர்களின் பெயர்களையும் உள்ளடக்கிய இரண்டு பதிவேடுகள் பேணப்படவேண்டும். இந்த வருடம் செப்தெம்பரில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அதிகாரிகள் தூதுக்குழு, இந்திய வம்சாவளியினருள் இலங்கைப் பிரசாவுரிமை வழங்கப்படவேண்டிய மற்றும் திருப்பி அனுப்பப்படவேண்டிய ஆட்களை தெரிவு செய்தலுக்கான அடிப்படையை பரிசீலித்தது. எனது அமைச்சில் பூரண தகவல்கள் உள்ளமையினால் அந்தஸ்து தீர்மானிக்கப்பட்ட 825000 ஆட்களினதும் பதிவுகளை தயார் செய்வதில் எவ்வித சிரமமோ தாமதமோ ஏற்படுமென நான் எதிர்பார்க்கவில்லை.

திருப்பி அனுப்பப்பட உள்ளவர்கள் தொழில் புரிபவர்களாக இருந்தால் திருப்பி அனுப்பப்படும் வரையில் அல்லது 55 வயதுவரும் வரையில் இதில் எது முதலில் நடைபெறுகிறதோ அதுவரைக்கும் பணியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள். புறப்படும் போது, ஒரு குடும்பம் நாணயப் பரிமாற்று கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஒரு குடும்பம் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படக்கூடிய சொத்துக்களின் அதிகூடிய அளவு ரூபா 4000/= விட குறைக்கப்பட மாட்டாது.

ஒரு கூட்டுப் பொறிமுறையை ஏற்படுத்தவும், இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த உரிய செயன்முறைகளை உருவாக்கவும் இரு அரசாங்களினதும் அதிகாரிகள் மிகக் கிட்டிய ஒரு தினத்தில் சந்திப்பார்கள்.

1949 – 1964 வரையான 15 வருடகாலப் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 184771 பேர் சுயவிருப்பில் நிரந்தரமாக 1954 ல் இருந்து செயற்பாட்டில் உள்ள திட்டத்தின் கீழ் இலங்கையை விட்டுச் சென்றார்கள். இவ்வொப்பந்தத்திற்கமைய, 1965 இன் ஆரம்பத்தில் இருந்து செயற்படும் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் 600000 க்கு மேற்பட்ட ஆட்கள் அடுத்த 15 வருடங்களில் தாயகம் திருப்பி அனுப்பப்படுவர்.

வருடாந்தம் 40000 இந்திய வம்சாவளியினரின் வெளியேறுகையானது தோட்டங்களிலும் ஏனைய பகுதிகளிலும் எமது மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
பின்வரும் விடயங்களில் இந்த இந்த ஒப்பந்தம் 1954 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை விட முன்னேற்றகரமானதாக உள்ளது.

(அ) திருப்பி அனுப்பப்படுவோருக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்க உறுதியளித்ததன் மூலமும் கட்டாயமாக திருப்பி அனுப்பும் கொள்கையை ஏற்றுக்கொண்டதன் மூலமும் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான தனது கடப்பாட்டை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.
(ஆ) ஊக்குவிப்புகள் ஏதும் செலுத்தத் தேவையுமில்லை. ஒருவர் 55 வயதை அடையும் வரை திருப்பி அனுப்புதலை நிறுத்தி வைக்கவும் தேவையில்லை.
( இ) இப்பிரச்சினை தீர்வில் “நாடற்றோர்” என்ற எண்ணக்கரு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தாது.
இலங்கையரது நலனுக்காக மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள்

இலங்கையர்கள் அல்லாதவர்கள் காணிக்கொள்வனவு செய்வதைக்கட்டுப்படுத்தும் முகமாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையர் அல்லாதவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதை மட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டமூலம் விரைவில் அறிமுக்கபடுத்தப்படவுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் அடையாள அட்டை விநியோகிப்பதன் மூலம் சட்ட விரோத குடிவருவோர் தொல்லைகளை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு உதவும் மூன்றாவது சட்டமூலம் ஒன்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சட்ட விரோத குடிவருபவர்களுக்கு எதிரான நடைமுறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நோக்கத்தின் நிமித்தம் இராணுவம், கடற்படை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்ற கையோரப் பிரதேசங்கள் திருகோணமலை, புத்தளம் ஆகியவற்றை தனது கிழக்கு, மேற்கு எல்லைகளாக கொண்டிருக்கும்.
இந்த வார அறிக்கையின் படி இந்திய வம்சாவளியினரை திருப்பி அனுப்புவதன் ஊடாக உள்நாட்டு சிங்கள மக்களுக்கு பெருந்தோட்டங்களிலும் பிறதொழில் வாய்ப்புகளிலும் வாய்ப்பை ஏப்டுத்திக்கொடுக்க சிறிமா எண்ணியுள்ளமை தெரியவருகின்றது. //தோட்டங்களிலும் ஏனைய பகுதிகளிலும் எமது மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
மலையக மக்கள் காணி கொள்வனவு செய்வதற்கு எதிராகவும் வேலை வாய்ப்பு பெறுவதை தடுக்கும் வகையில் சட்டத்தினை கையாள அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை தெரியவருகிறது. //காணிக்கொள்வனவு செய்வதைக்கட்டுப்படுத்தும் முகமாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையர் அல்லாதவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதை மட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டமூலம் விரைவில் அறிமுக்கபடுத்தப்படவுள்ளது//
தேசிய அடையாள அட்டை அறிமுக்கபடுத்துவதன் ஊடாக இந்திய வம்சாவளி தமிழர்களை வேறுபடுத்தல்.

//18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் அடையாள அட்டை விநியோகிப்பதன் மூலம் சட்ட விரோத குடிவருவோர் தொல்லைகளை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு உதவும் மூன்றாவது சட்டமூலம் ஒன்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது//.
இலங்கையில் எல்லோருக்கும் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் இறுதியில் V எழுத்து குறிக்கப்பட இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர் பலருக்கும்   இலக்கத்தின் இறுதியில் X என்ற எழுத்தே வழங்கப்பட்டுவந்துள்ளது. அது இலங்கையில் அவர்கள் முழுப்பிரஜைகள் இல்லை என்பதை காட்டுவதற்கான அடையாளமாகும். மிக அண்மைக்காலமாகவே இதற்காக பாராளுமன்றில் குரல் எழுப்பி எல்லோருக்கும் பொதுவான அடையாள அட்டையை இலக்மகத்லைதின் பின்னால் இலக்கங்கள் ஏதுமின்றி எல்லோரையும் போல மலையகத்  தமிழ் மக்களும் பெற்று  வருகின்றனர்.
( தொடரும்… )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *