Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தலவாக்கொல்லை போராட்டம்

செ. கிருஷ்ணா

மலையக வரலாற்றில் இன்று (23/09/2018) ஒரு மிக முக்கிய நாள். மலையக மக்கள் இதுவரை பல போராட்டங்களுக்கூடாகவே தமது உரிமைகளை வென்று வந்துள்ளனர். இப் போராட்டங்களில் பல வெற்றி பெற்றும் சில காட்டிக் கொடுக்கவும் பட்டன என்பதனை வரலாறு நெடுகிலும் காணலாம். ஆனால் அமைச்சர் திகாம்பரம் செப்டம்பர் 23 தலவாக்கலையில் போராட்டம் என அறிவித்த போது, தம் கட்சி சார்ந்தோர் ஆதரவாகவும்; பலர் எதிராகவும் முன்னுக்குப் பின் பல வாதங்களை முன்வைத்து சமூகத் தளத்திலும், சமூக வளைத்தளங்களிலும் தமது கருத்துக்களை பறக்க விட்ட வண்ணமிருந்தனர்.

இதன் போக்கில் மலையகத் தொழிலாள சமூகம் என்பது தனியே பெருந்தோட்டத் துறையை மட்டும் சார்ந்திராது, பலதரப்பட்ட சமூக அசைவியக்கமாக இன்று வளர்ந்துள்ளபடியால், தலவாக்கலை போரட்டத்துக்கு இளைஞர்கள் சுயமாக முன் வந்து, ஆதரவு நிலைப்பாட்டினை முகநூலுக்கூடாக முன் நிறுத்தி; மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைப்பதனை உறுதி செய்ய வேண்டுமானால் இப் போராட்டத்தில் கட்சிக்கு அப்பால் அனைத்து தரப்பும் ஒருமிக்க வேண்டிய தேவை குறித்து உரையாடினர்.

இப் போராட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் திகாம்பரம், தமிழ் முற்போக்கு கூட்டணியை தவிர ஏனைய மலையக அரசியல் கட்சிகளையும், தொழிற்சங்கங்களையும் இணைத்து போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டில், பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது ஒருமித்த் ஆதரவை திரட்டுவதில் வெற்றி காண்கிறார். பல தொழிற்சங்கங்கள் இணைந்து தமது ஆதரவை வழங்குவதாக ஊடக அறிக்கை வெளிவந்ததோடு, இப் போராட்டம் ஒரு கட்சி/அரசியல் போராட்டம் என்பதனைத் தாண்டி, அரசியல் போராட்டமாக வடிவெடுத்துவிட்டது.

இப் போராட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூக அசைவை கருத்திற் கொண்ட மலையக ஆசிரியர் சமூகமும் இப் போராட்டத்தில் இணையும் முகமாக, மலையக ஆசிரியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து ஆசிரிய தொழிற்சங்கங்களும் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தது. இது மட்டுமன்றி கடல் கடந்து வாழும் மலையக உறவுகள் நேரலையில் தமது ஆதரவினையும், போராட்டம் வெற்றி பெறவும் தமது ஆதரவினை தெரிவித்தனர்.

இவ்வாறாக இன்று இப்போராட்டம் ஆரம்பித்த போது மலையக நகர வர்த்தகர்கள், தாமும் இப் பின்னணியில் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், கடையடைப்பு செய்து தமது ஆதரவை வழங்கினர். இதில் குறிப்பாக தலவாக்கலை நகரில் சகல மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதனை இளைஞர்கள் பலர் முகநூலில் பதிந்து இப்போதே பாதி போராட்டம் வெற்றி பெற்றதொ போலத்தான் என ஆனந்தப் பட்டதனையும் காண முடிந்தது.

இவ்வாறு ஆரம்பமான போராட்டத்தில்; யுத்தத்துக்கு பின் வட-கிழக்கை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், திரு.சிறீதரன் கலந்து கொண்டமை மலையகம் தாண்டியும் இப் பிரச்சினைக்கு ஆதரவு குரல் வலுத்து வருவதைக் காட்டியது.

இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் எம். திலகராஜா, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக எஸ்.ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.சதாசிவம், மக்கள் தொழிலாளர் சங்கம் சார்பாக சட்டதரனி இ. தம்பையா, பெருந்தோட்ட உழைப்புரிமை சங்கம் சார்பாக சு. விஜயகுமார், மலையக தொழிலாளர் முன்னணியின் சார்பில் அனுஷா சந்திரசேகரன், விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, சிவில் சமூக அமைப்பு சார்பாக பிரீட்டோ சந்திரசேகரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ் ராஜரட்ணம், கொழும்பு வாழ் மலையக இளைஞர்கள் சார்பாக கிருஷாந்த், தேயிலை தேசம் சார்பாக யோகசாந்தினி, ஆகியோரும், தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் தொழிற்சங்க ஆலோசகர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பிரதித் தலைவர் மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் ஈரோஸ் ராஜேந்திரன் ஆகியோர் உiராயற்றியதுடன் மத்திய மாகாகண சபை உறுப்பினர்களான சரஸ்வதி சிவகுரு, ராஜாராம், ஸ்ரீதரன், ராம், மலையக மக்கள் முன்னணி செயலாளர் ஏ.லோரன்ஸ், தொழிலாளர் தேசிய சங்க பொது செயலாளர் எஸ்.பிலிப், மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் கே.சுப்பிரமணியம் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல், தொழிற்சங்க, சிவில் சமூக அமைப்பினர், ஆசிரிய தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள், அரசசார்பற்ற அமைப்புகள் என பல கட்சி முக்கயஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் ஆரம்பமான போராட்ட பேரணி தலவாக்கலை கொத்மலை வீதி ஊடாக தலவாக்கலை நகரசபை மைதானம் வரை சென்றடைந்தது.

நியாயமான சம்பள உயர்வு கோரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சென்றதை இதன்போது காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சரவையும் ஏனைய கட்சிகளும் கூட பாராளுமன்றத்தில் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு எமக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு முதலில் நன்றி தெரிவிக்கின்றேன். அதேநேரம் கடந்த இருபத்தைந்து வருஷகாலமாக தோல்விப்பாதையில் சென்று கொண்டிருக்கும் இலங்கைப் பெருந்தோட்டக் கைத்தொழிலில் கடைபிடிக்கப்பட்டுவரும் கூட்டு ஒப்பந்த முறையை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்தும் நாம் கவலை அடைகின்றோம்.

இன்று நடைபெறுகின்றன இந்தப் போராட்டத்தின் பின்னால் உள்ள பிரச்சினை தனியே தொழிலாளர் மக்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமான பிரச்சினை மாத்திரமல்ல. இது இந்த நாட்டின் பொருளாதார பிரச்சினை, இந்த நாட்டின் பிரதான கைத்தொழில் துறையின் பிரச்சினை, ஏற்றுமதி வருமான குறைவு பிரச்சினை. பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையால் அவை மூடப்பட்டு வருகின்றன. இதனை இந்த நாட்டின் கொள்கை வகுப்பாளர்களும், பொருளாதார நிபுணர்களும் கூட கையில் எடுக்க வேண்டிய பிரச்சினை. ஆனால், தோட்ட தொழிலாளிகளின் சம்பள பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுவது வேதனை அளிக்கிறது.

எனவே இன்றைய போராட்டத்தின் மூலம் இந்த நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் ஒரு தகவலை சொல்லுகின்றோம். இதனை ஒரு தேசிய பிரச்சினையாகப் பாருங்கள் , எமது நாட்டின் தேசிய பொருளாதார பிரச்சினையாக கவனமெடுத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினைக்கு மாத்திரமல்லாது தோல்வியடைந்த கூட்டு ஒப்பந்த முறையை மாற்றி பெருந்தோட்டக் கைது தொழிலை பாதுகாக்கும் புதிய முறைமை ஒன்று தொடர்பில் ஒன்றுபட்டு சிந்தியுஙகள் என நாங்கள் ஒன்று சேர்ந்து விடுக்கும் பொது அழைப்பே இந்த தலவாக்கலை போராட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்பதாக போராட்டத்தை தலைமை தாங்கியோரின் கோரிக்கையாக அமைந்தது.

இப் போராட்டத்தில்; கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்ட இடதுசாரி செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான இ.தம்பையாவும் கலந்துகொண்டிருந்தார்.

இப் போராட்டத்தில்; கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்ட இடதுசாரி செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான இ.தம்பையாவும் கலந்துகொண்டிருந்தார்.

இப் போராட்டம், கூட்டு ஒப்பந்த்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலளர் காங்கிரசுக்கு, பேரம் பேசும் சக்திக்கு வலு சேர்த்துள்ளதோடு, ஒரு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகளை பொறுத்த வரை இம் முறை வலுவிச் செல்லும் போக்கை கடைப்பிடித்தால், அரசாங்கத்தின் நேரடி தலையீடு முன் எப்போதுமற்ற விதத்தில் அமையும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனை செய்ய வேண்டிய கட்டாயம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது.

மாறாக குறைந்த ஒரு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுமானால், தலவாக்கலை போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நோக்கிய நகர்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியும், இப் போராட்டத்தில் கலந்து கொண்ட சிவில் சமூக அமைப்புகள் முன் வருவதோடு; தொடர்ச்சியாக சம்பள பேச்சுவார்த்தை குறித்த செயற்பாடுகளை அவதானித்து வருவதும் அது குறித்த ஆரோக்கியமான முன்னெடுப்புகளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்கக் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *