Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தனிவழிக் கவிராயர் “சக்தீ”

1948 ஆண்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறிப்புடன் மலையகத் தமிழர் இனத்தையும் கேள்விக்குட்படுத்திய சுதேச இலங்கை அரசு அடுத்த பத்தாண்டுகளில் நிகழ்த்திய இன்னுமோர் இனப்பாகுபாடுதான் தனிச்சிங்களச் சட்டம். அது நாட்டின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இலங்கைத் தமிழர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இலங்கை நாட்டில் ஆட்சிப்பங்கு கோரிய வட கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்கள் தமது மொழியுரிமை பறிப்புக்கு எதிராக போராடத் தலைப்பட்டனர். முன்னதாக மலையகத் தமிழரின் குடியுரிமைப் பிறப்பின்போது பின்னாளில், வேறொரு வடிவில் தமக்கு நேரும் என எச்சரித்திருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைத்தது நடந்தது.

ஏற்கனவே நாட்டுரிமை இழந்துவிட்டநிலையில் இருந்த மலையகத் தமிழர்க்கு மொழியுரிமை மறுக்கப்பட்டது இரண்டாம் பட்சமே. மலையகப் படைப்பாளிகள் எல்லோரும் தமது குடியுரிமைப் பறிப்புக்கு எதிராக குரல் எழுப்பி வந்த வேளை, தமிழ் மொழி உரிமை பறிப்புக்கு எதிராக இலக்கிய வழி குரல் எழுப்பியவர் சக்தீ அ. பாலையா.

மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகளை தமிழாக்கம் செய்ததால் ஒரு மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டவர் சக்தீ பால அய்யா. ஆனால், தனியே அவர் மொழி பெயர்ப்பு செய்பவராக மட்டும் இருந்திருந்தால் சி.வியின் ஆங்கில மூல கவிதைகள் இத்தனை இலக்கிய சுவையோடு தமிழில் வந்திருக்க வாய்ப்பில்லை. இதனால்தான் தான் சி.வியின் கவிதைகளை “தமிழில் மொழிபெயர்க்கவில்லை”, “தமிழாக்கமே” செய்தேன் என சக்தீ தெளிவாகவே சொல்லிவந்தார். அதற்கு காரணம், சக்தீ இயல்பாகவே ஒரு தான்தோன்றி கவிஞராவார்.

தனிவழிப் கவிராயர், சக்தீ போன்ற பெயர்களிலும் அவர் பல கவிதைகளை தாமாக எழுதியுள்ளார். அவை இரண்டு தொகுக்காப்புகளாக வெளிவந்துள்ளன. “சொந்த நாட்டிலே” ( 1961 – சுதந்திரன் அச்சகம், கொழும்பு 12), “சக்தீ பால அய்யா கவிதைகள்” ( 1997 துரைவி பதிப்பகம் – கொழும்பு 13 ) ஆகிய இரண்டில் “சொந்த நாட்டிலே” முற்று முழுதாக அரசியல் குரலாக ஒலித்திருப்பதனை அவதானிக்கலாம்.

சொந்த நாட்டிலே ..! எனும் தொகுப்புக்கு உப தலைப்பாக “தேசிய கீதங்கள் “ என அடைப்புக்குறிக்குள் குறித்திருக்கும் சக்தீ பாலையா இவ்வாறு ஒரு முன்னுரை எழுதியுள்ளார்.

“ இந்த வெளியீட்டில் காணப்படும் சில கவிதைகளை பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். “ தனிவழிப்கவிராயர்”, “ சக்தீ “ என்ற புனைப் பெயர்களைத் தாங்கி வெளிவந்துள்ளன. தமிழினத்தில் பிரிவும் பேதமும் இல்லை. தமிழ்க்குடி எங்கிருந்தாலும், தமிழ்க்குடியாகவே வளர வேண்டும். வாழவேண்டும். அதனால் தமிழ்மொழி அரசாள வேண்டும். நாம் தமிழினத்தவர், தமிழர் என்று கூறும்போது அதில் தன்னிகரில்லாப் பெருமை தொனிக்க வேண்டும்.ஆம், தமிழ்க்குடியின் மாட்சி இந்த வையத்தையும் வான மண்டலத்தையும் பாலிக்க வேண்டும்”

1958 ஆம் ஆண்டு அவர் எழுதிய “விடுதலை முழக்கம்” எனும் கவிதை இவ்வாறு அமைகிறது.

விடுதலை முழக்கம் – கேட்குது
விரைந்தெழுந்திடடா
நடுநிலை தவறா – ஆட்சி
நமதுரிமையடா

கன்னித்தீவு தமிழ்மொழியைக் – கயவர்
கட்டுப் படுத்துவதோ
இன்னும் ஏனோ தயக்கம் – துணிந்த
எதிர்த்தெழ வாடா

நீதி செழித்திடவும் – தமிழர்
நேர்மை கொழித்திடவும்
பீதி ஒழித்திடவும் – சுதந்திரம்
பிறந்துவிட்டதடா

அஞ்சி வாழ்வதில்லை – தமிழன்
அடிமையாவதில்லை
தஞ்சம் புகுவதில்லை – தமிழன்
தலைக் கவிழ்வதில்லை

மண்ணைப் பொன்னாக்கிடுவோம்- உழைத்து
மாட்சிமிகும் ஆட்சி
எண்ணம் போல் செய் திடுவோம் – தமிழ்த்தாய்
இன்புற காண்போமடா

இல்லைஎன்பார் கொடுங்கோல் – இங்கு
இல்லையாகச் செய்வோம்
அல்லல் அழித்திடுவோம் – தமிழ்க்குடி
அரசமைத்திடுவோம்

ஆணவச் சிங்களமாம் – சட்டத்துள்
அடங்கி வாழாதே !
பேணத் தவறாதே – தமிழினப்
பெருமை மறவாதே ( 1958)

காந்தியின் உருவத்தை அட்டைப்படமாகக் கொண்ட நூலின் உள்ளே, பாரதியின் “கேளடா மானிடவா… இனி கீழோர் மேலோர் இல்லை..” என்ற பாடலை நினைவுப்படுத்துவதாக அமைந்த மேற்படி கவிதைக்குள் மொழியுரிமைப் பறிக்கப்படதற்கு எதிராக மாத்திரமன்றி, “ தமிழ்க்குடி அரசமைத்திடுவோம்” என தனி நாட்டுக் கோரிக்கை முன்வைப்பு இடம் பெற்றிருப்பதையும் அவதானிக்கலாம். தவிரவும்,

நீதி செழித்திடவும் – தமிழர்
நேர்மை கொழித்திடவும்
பீதி ஒழித்திடவும் – சுதந்திரம்
பிறந்துவிட்டதடா

என்ற வரிகள் மூலம் “சுதந்திரன்” பத்திரிகை வெளியிடப்படுகிறது எனும் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “சொந்த நாட்டிலே” தொகுதியில் வெளியான பல கவிதைகள் “சுதந்திரன்” பத்திரிகையில் வெளிவந்ததோடு, சக்தீ அ. பாலையா அதன் ஆசிரிய குழாமிலும் இருந்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் பத்திரிகையான “ சுதந்திரன்” பத்திரிகையில் எழுதியதோடு மட்டுமல்லாமல், தந்தை செல்வாவுடன் நெருக்கமானவராகவும் அவருடன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்பவராகவும் இருந்துள்ளார். தனியே கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், ஓவியராகவும், மொழிபெயர்பாளராகவும் மட்டுமின்றி தீவிர அரசியல் செயற்பாட்டாளராகவும் இயங்கியிருக்கிறார் சக்தீ அ. பாலையா. “தனிவழிக் கவிராயர் “ என்பவர் சக்தீ பாலையா என்பது தெரியவந்ததுடன் “சொந்த நாட்டிலே” (தேசிய கீதங்கள்) என எழுதி வெளியிட்டதன் காரணமாக இதனால், பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் என்பது பலரும் அறியாத செய்தி. இந்த செய்தியையும் தொகுப்பையும் வெளியிடாத சக்தீ தனது இறுதி நாட்களில் இந்த உண்மைகளையும் தன் கைவசம் இருந்த ஒரே ஒரு பிரதியையும் வெளியிட்டார்.

எனவே, சமகாலத்தில் இலக்கிய குரலாக தமது அரசியலை வெளிப்படுத்தியவரான கவிஞர் சக்தீ பால அய்யா மலையகம் குறித்து ஆற்றிய அரசியல் பங்களிப்பை அடுத்து பார்க்கலாம்.

( தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *