Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பாராளுமன்ற உறுப்பினர் எம். திலக்ராஜ் தினகரன் வாரமஞ்சரி க்கு வழங்கிய நேர்காணல்


இப்போது திருப்தியாக இருக்கிறதா?


ஆம்.. அதிருப்தியில் இருந்து எழும்புகின்ற திருப்தியாக இருக்கிறது. நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் சட்ட ஆட்சி மீதும் ஏற்படுத்தப்பட்ட சவாலில் இருந்து மீட்சி பெற்ற திருப்தி இருக்கிறது. நாங்கள் ஜனநாயகத்தின் பக்கம் நின்று அதற்காக போராடி பெற்ற வெற்றியாக திருப்தியாக இருக்கிறது. மற்றபடி எல்லா அரசியல் சூழ்நிலைகளும் சரிவந்துவிட்டதான திருப்;தி ஒன்று இல்லை. அத்தகைய திருப்தி ஒன்றினை அடைய இந்த நாடு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

இப்படி ஒரு அரசியல் சூறாவளி ஏற்படும் என்பதை யூகிக்கும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தனவா?


ஆம். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் 2018 முற்பகுதியில் வெளியான போதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்தபோதும் இத்தகைய ஒரு சூறாவளிக்குரிய அறிகுறிகள் தென்பட்டன. ஜனாதிபதி தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் கணிப்பு வேறானதாக இருந்தது. நாங்கள் ஜனாதிபதி மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய போதெல்லாம் எங்களை பொறுமை காக்குமாறு பிரதமர ; ரணில் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தனி அரசாங்கத்தை அமைப்போம் என உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிந்த வுடனான சந்திப்புகளின்போது பிரதமரிடம் எடுத்துக் கூறினோம். அப்போது பல உப குழுக்களை அமைத்து ஆலோசனைகளை கேட்டு இருந்தார். நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பானவராக மாத்திரம் ஜனாதிபதி செயற்படுகிறார் என்பதை தெளிவாக விளக்கினோம்.

முதலாவது தடவையாக பாராளுமன்றத்தைக் கூட்டத் தொடரை ஒத்திவைத்து மீளவும் ஆரம்பித்த மே மாதம் 8ம் திகதி ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரை அவரின் மாற்று நிலைப்பாட்டை தெளிவுபடுத்தின. அந்த உரை மீதான விவாதம் இடம்பெற்ற 2018 மே 10 ம் திகதி என்னுடைய பாராளுமன்ற உரையில் ஜனாதிபதி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தேன். அவர் பக்கம் சாரந்து செயல்படுகிறார் என்பது எனக்கு புரிந்தது. அதனை வெளிப்படையாகவே தெரிவித்தேன். ஆனால், ஜனாதிபதி அரசிலமைப்பை மீறுவார் என இந்த நாட்டு மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த 50 தினங்களில் ஐக்கிய தேசிய முன்னணி அரசு மேற்கொண்டிருந்த அபிவிருத்தி, மீளமைப்பு, கட்டமைப்பு பணிகள் ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தனவா அல்லது பதவி ஏற்றிருந்தவர்கள் அவற்றை முன்னெடுத்தார்களா?

முழுமையாக அபிவிருத்திப்பணிகள் முடக்கப்பட்டன. போலி அரசாங்கத்தை அமைத்தவர்களுக்கு எல்லா அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முடக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. எங்கும் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை. அவர்களது கட்சி சார்ந்தவர்களுக்கு பதவிகளை பெற்றுக்கொடுப்பதிலும், வாகனங்களை பகிர்ந்துகொள்வதிலும் மாத்திரமே அக்கறை காட்டினார்கள். நாங்கள் வருட இறுதியில் செய்து முடிப்பதற்கு திட்டமிட்டிருந்த அநேகமான வேலைகள் அப்படியே முடக்கப்பட்டன.

இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. மலையகத்தில் சாதித்திருப்பவை திருப்தி அளிப்பதாக உள்ளதா?

நிச்சயமாக . வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு மலையக அரசியல் பற்றிய புரிதலை நாங்கள் மக்களிடத்தில் கொண்டு சென்றிருக்கிறோம். மலையக அரசியலை சாதாரண மக்களும் பேசும் சூழல் உருவாகியிருக்கிறது. பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. துணிந்து போராட்டங்களில் ஈடுபடவும் அரசியல்வாதிகளை விமர்சிக்கவும் துணிவு கொண்டிருக்கிறார்கள். போராட்ட உணர்வு மேலோங்கியிருக்கிறது.

மலையகத்தில் இருந்து தெரிவான உறுப்பினர்களால் பாராளுமன்றததில் சிறப்பாக செயற்பட முடியும் என்கின்ற நம்பிக்கை மக்களிடத்தில் தோன்றியிருக்கிறது. நமது வாக்குகளினால் பெற்ற பாராளுமன்ற பதவிகளைக் கொண்டு கால்நடைளை அபிவிருத்தி செய்யும் அமைச்சைத் தான் பெற முடியும் என்ற முன்னைய வழக்கத்தில் இருந்து மாறுபட்டு மக்களுக்கான அமைச்சையும் அதற்கான வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. ஒரு குடும்ப பெயரையும் மட்டும் வைத்து வளைவு, நுழைவு, சந்து , பொந்து என அனைத்துக்கும் ‘ தொண்டமான’ பெயரைச் சூட்டி குடும்ப அரசியல் செய்யாமல் மலையகத்தின் தியாகிககள், போராளிகள், தொழிற்சங்கவாதிகள், இலக்கியவாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள், கல்விமானகள் என பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை முன்னிறுத்தி கிராமங்கள் அமைக்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடிந்தது. இந்த மூன்றரை ஆண்டு காலமாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற நிதி குறைவானதாகவே இருந்தது. ஆனாலும் கிடைத்த நிதியினைக் கொண்டு ‘எண்ணக்கரு’ அடிப்டையிலான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளோம் என்பதில் திருப்தி அடைகின்றோம்.

எதை நீங்கள் உங்கள் அரசியல் வாழ்வில் எதிர்பாரா மாற்றம் அல்லது ஏமாற்றம் எனக்கருதுகிறீர்கள்?


தேர்தல் அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பதாகவே நான் அரசியல் சார்ந்து செயற்பட்டும் எழுதியும் பேசியும் வந்துள்ளேன். அப்போது நாங்கள்தொடர்ச்சியாக பேசிவந்த பிரதேச சபைகளில் மலையகப் பெருந்தோட்ட மக்களை உள்வாங்காத 1987 ஆம் ஆண்டு 15 ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று எழுதியம் பேசியும் வந்துள்ளேன். முன்னைய பாராளுமன்ற உறுப்பிர்களிடம் கோவைகளை எடுத்துச்சென்று விளக்கி அதனை திருத்தும் பிரேரணை ஒன்றை முன்வைக்குமாறு கேட்டிருக்கின்றேன். ஆனால் அது எப்போதும் சாத்தியமாகவில்லை. அதேநேரம் தேர்தல் அரசியல் பிரவேசம் செய்தபோது இந்த சட்டத்திருத்ததை மேற்கொள்வது என கங்கனம் கட்டிக்கொண்டேன்.

பாராளுமன்ற உறுப்பினராகி 2015 செப்தொம்பர் மாதம் முதலாம் திகதி பதவியேற்று நவம்பர் மாதமே முதலாவது உரையை ஆற்ற கிடைத்தது. ஆனால் டிசம்பர் மாதத்திலேயே என்னுடைய நீண்டநாள் கனவு பிரேரணையான ‘பிரதேச சபைகள் சட்டத்திருத்த பிரேரணையை முன்வைத்து, துறைசார் அமைச்சரின் ( பைசர் முஸ்தபா) ஒப்புதலை சபையில் பெற்றேன். எமது கூட்டணியின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினரக்ளினதும் ஒத்துழைப்போடும் அந்த பிரேரணையை தொடர்ச்சியாக வலியுறத்தி சட்டமா அதிபர், சட்டவரைஞர் ஆகியோரை எல்லாம் நேரடியாக சந்தித்து அந்த திருத்தத்தை கொண்டு வரமுடிந்தது எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். இது பெரிய மாற்றம். அதேபோல அமைச்சர் திகாம்பரரத்தின் முன்னெடுப்பில் மலையக அதிகார சபைச் சட்டத்தை நாங்கள் வென்றெடுத்ததும் எமது கூட்டணியினர் மலையகத்துக்கு செய்த பெரு மாற்றமாக கருதுகிறேன்.

ஏமாற்றம் என்று பார்த்தால் மலையக மக்களில் இருந்து வருகின்ற பிரதிநிதிகள் மாத்திரமே அந்த மக்களின் பிரச்சினைகளை பேசவேண்டும் என்றும் அதற்கதான பிரேரணகளை முன்வைக்க வேண்டும் என்றும் ஒரு நிலைபபாடு இலங்கை அரசியல் சூழலில் காணப்படுவது பெரும் ஏமாற்றமாக இருக்கின்றது. மலையக மக்கள் தொடர்பில் பெரும் அனுதாபத்தோடு பாராளுமன்றில் உரையாற்றும் பலர் அவர்களை பரிதாபப்; பார்வையுடன் பார்க்கின்றார்களே தவிர அந்த மக்களுக்கான பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் பிரேரணைகளை முன்வைப்பவர்களாக இல்லை. நான் மேலே சொன்ன பிரதேச சபை சட்டத்திருத்தம் அதற்கு சிறந்த உதாரணம். சம்பள பிரச்சினை கூட அவ்வாறானதுதான்.

கூட்டு ஒப்பந்தத்துக்கு வருவோம். 500 ரூபா சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்து என்று கேட்பது சரியாகத் தெரியவில்லையே! அடிப்படை சம்பளத்தை 500 இல் உயர்த்த கம்பனிகள் ஒத்துக்கொள்ளவும் மாட்டா. அவ்வாறானால் உங்கள் மனதில் உள்ள தொகை என்ன? எந்த நிபந்தனையும் அற்றதாக 750 ரூபா என்பது சரியாக இருக்குமா? இலங்கை பொருளாதாரம் மேலும் நலிந்துவிட்ட நிலையில் முதலாளிமார் மேலும் பலமடைந்துவிட்டதாகவே கொள்ள வேண்டும் அல்லவா?

என் மனதில் கனவுத் தொகை இல்லை. ஆனால் ஒரு முறைமை பற்றிய சிந்தனை இருக்கின்றது. 1992 ஆண்டு பெருந்தோட்டங்களை தனியார் மயப்படுததுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்போது பல்வேறு தவறுகள் விடப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக நாட்சம்பளத்துக்காக மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் மலையக பெருந்தோட்ட மக்களை ‘ஒப்பந்த பிரஜைகளாக’ மாற்றிவிட்டிருக்கிறார்கள். அந்த ஒப்பந்தம் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இல்லை. அடிப்படை சம்பளம் மற்றும் அதன் வருடாந்த அதிகரிப்பு வீதம் பற்றிய தெளிவான சரத்துகள் இல்லை. அதனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமான வீதத்தில் நாட்சம்பள உயர்வு மேற்கொள்ளள்பட்டு இருப்பதால் இப்போது 100 வீத அதிகரிப்பு அசாதாரண கோரிக்கையாக வெளிப்பட்டு நிற்கின்றது.

எனவே கூட்டு ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு அதன் குறைபாடுகள் நீக்கப்பட்டு புதிய முறை பற்றியே சிந்திக்க வேண்டும். 1000ஃ- என்பது ஒரு மாயைத் தொகை. கிடைக்க வேண்டிய தொகை அதனை விட அதிகமானது என்பதே உண்மை.

இந்தத் தினசரி சம்பள முறையில் இருந்து வெளிவாரி பயிர்ச்செய்கைக்கு தொழிலாளர் குடும்பங்கள் மாறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் கயிறிழுப்பு வாழ்க்கையை விட அது பரவாயில்லை அல்லவா?

வெளிவாரிப்பயிரிடல் தொடர்பான கொள்கைத் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ளாமல் பாராளுமன்ற அனுமதி இல்லாமல் மேற்கொள்ளபட்டுவருகின்றது. இதனால் இந்த முறைமையின் ஊடாக தொழிலாளர்களின் தொழில்சார் சட்டங்கள் மீறப்படுகின்றன. வெளிவாரிப்பயிரிடலை இவ்வாறு செய்வதற்கு தோட்டக் கம்பனிகளுக்கு அனுமதி வழங்க முடியாது. ‘நிலம்;’ என்கின்ற அடிப்படையில் தொழிலாளர்களிடையே தொழில் பகிர்வு இடம்பெறவேண்டும். அது பற்றிய பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராகவே உள்ளோம். ஆனால், கம்பனிகள் முன்வைக்கும் ‘வெளிவாரி’ பயிரிடல் ‘நில’ அடிப்படை அற்றது. ஆபத்தானது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ் முற்போக்கு கூட்டணி அடிப்படையான சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை முன்னெப்பொழுதும் நிகழாதவை. அடுத்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் என்னென்ன செயல்திட்டங்களை முன்னணி கொண்டிருக்கிறது?

பல பிரேரணைகள் இன்னும் வருவதற்கு உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அமைச்சரவை பத்திரமும் சமரப்பிக்கபடப்டுள்ளது. இந்த குழப்ப நிலை ஏற்படாவிட்டால் அதனை செய்து முடித்திருப்போம். எனவே அதனை மீள கையில் எடுக்க வேண்டியுள்ளது. பெருந்தோட்ட சுகாதார முறைமையை முழுமையாக அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவரும் வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளது அதனை விரைவுபடுத்த வேண்டி இருக்கிறது. இது தவிர பெருந்தோட்டப் பாதைகளை பெருந்தோட்ட கம்பனிகளின் பராமரிப்பில் இருந்து வீதி (மாகாண) அபிவிருத்தி அதிகார சபை யின் உள்வாங்கும் பிரேரணை என்னால் சமர்ப்பிக்கபட்டுள்ளது.

இது தவிர பெருந்தோட்டக் கைத்தொழிலை மீளமைப்பு தொடர்பில ; தனிநபர் பிரேரணை ஒன்றையும், மலையகத் தமிழரின் அடையாளம் தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றையும் கூட மன்றுக்கு சமர்ப்பித்துள்ளேன். இவை எல்லாம் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படும்.

மத்திய மாகாணத்தில் ரதல்ல பகுதியில் மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட பணிகள் நடைபெற்றதாகவும் பின்னர் கைவிடப்பட்டதாகவும் அறிந்தோம். இவ்வாறான ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது பற்றிய சாத்தியங்கள் உள்ளனவா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை 1000ஃ அடிப்படையில் நின்று பேசுவது போலத்தான் பல்கலைக்கழகத்தை ‘ரதல்ல’ எனும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு பேசுவது. ஏந்த இடத்தில் அது அமையப்பெறும் என்பதற்கு அப்பால் அது ஒரு எண்ணக்கரு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மலையக மாவட்டம் ஒன்றில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ‘மலையகப் பல்கலைக்கழகம்’ என்ற பெயர்ப்பலகையுடனான கட்டடம் அல்ல . யாழ், கிழக்கு , கொழும்பு, சப்ரகமுவ, களனி என நாட்டின் பல பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களை தமது உயர் கல்வியை நுவரெலியா மாவட்டத்திலேயே அமைக்கப்படும் மலையகப் பல்கலைக்கழத்தில் தொடர்ந்தால் அது மலையகப் பலகலைக்கழகம் என புரிந்து கொள்வது தவறு. அத்தகைய ஒரு பல்கலைக்கழகம் மலையக பண்பாட்டு கலை கலாசர தொழில்சார் விடங்களை ஆய்வுப்பொருளாக்கிய அதனை மீட்டெடுக்கின்ற முயற்சியாக அமைய வேண்டும்.


எங்களிடம் ஒரு திட்டம் இருக்கின்றது. இப்போதைக்கு அமைச்சரும் எமது கூட்டணி தலவருமான மனோ கணேசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து மலையக பேராசிரியர்கள,; கொள்கை வகுப்பாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ‘ எண்ணக்கரு பத்திரத்தை’ ஒன்றை தயாரித்துள்ளோம். விரைவில் உயர்கல்வி அமைச்சின் ஊடாக அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க உள்ளோம். நானு ஓயா பகுதியில் மும்மொழி தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு இருக்கிறது. அதேபோல ஹொலிரூட் பகுதியில் தொழிநுட்ப கல்லூரி ஒன்றை அமைக்கவும் கல்வி ராஜாங்க அமைச்சராக இருந்த கூட்டணியின் பிரதி தலைவர் ராதாகிருஸ்ணன் இவற்றுக்கான முயற்சிகைள மேற்கொண்டிருந்தார். அவை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். இவை மலையகப் பல்கலைக்கழகம் அல்ல.

நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறீர்களா? மலையகத் தமிழ் சமூகப் பார்வையில் சொல்லுங்கள்.


இது தொடர்பாக பாராளுமன்றில் விரிவான உரை ஒன்றை கடந்த வாரம் ஆற்றியிருந்தேன். அதனை சுருக்கமாக இங்Nகு மீளவும் சொல்கிறேன். இந்தநாட்டில் எத்தகைய ஆட்சிமுறையும் எல்லா மக்களுக்கும் சமத்துவமான ஆட்சி முறையாக அமையும் வகையில் அமைக்கப்படவில்லை. இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையில் பல்வேறு குறைபாடுகளைக் கண்டு விமர்சிப்போர் மத்தியில் இதற்கு முன்னதான பிரதமர் முறைமையிலான ஆட்சி மாத்திரம் எங்களுக்கு நன்மையே செய்தன என சொல்வதற்கில்லை. மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பும், நாடு கடத்துலும் பிரதமர் ஆட்சியான பாராளுமன்ற முறைமையிலேயே நடந்தது.

எத்தகைய ஆட்சி முறை என்பது அல்ல பிரச்சினை. நாட்டில் எவ்வாறு ஆட்சி எல்லோருக்கும் சமனானதாக செய்யப்படுகின்றது என்பதன் அடிப்படையிலேயே ஆராயப்படல் வேண்டும். எங்களைப் பொறுத்தவரை இந்த பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் இப்போதைய தொகுதிமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவை சமத்துவமானதாக இல்லை. எங்களது மக்களின் விகிதாசாரத்திற்கு எற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அமையும் வகையிலான தொகுதி நிர்ணயமும் எங்களுக்கு காப்பீடு வழங்கக்கூடிய செனட் முறைமை போன்ற ஒன்றோ உறுதிப்படுத்தப்பட்ட அரசிலமைப்பு ஒன்று முன்வைக்கப்படும் வரை இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக நாங்கள் நிலஉரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடிகின்றமையியானல் அதனை ஆதரித்து வந்துள்ளோம். இந்த முறையிலான ஜனாதிபதி தேர்தல் முறையில் முழு நாடும் ஒருதொகுதியாக கணக்கெடுக்கப்படுவதால் மலையகமக்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமும் தங்களது கோரி;க்கைகளை நிறைவேற்றக்கூடிய ஒருவருக்கு வாக்களித்து தங்களது பேரம் பேசும் சக்தியை உறுதி செய்கின்றன. அதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைதான் சிறந்தது என நாங்கள் கூறவில்லை. எங்களது உரிமைகளை உறுதி செய்யத்தக்கதான பாராளுமன்ற முறையை அமைக்க கூடியதேர்தல் முறையும் தொகுதிமுறையும் தீர்மானிக்கப்பட்ட அரசிலமைப்பினை முன்வைத்து நிறைவேற்றி எங்களுக்கு நியாயம் வழங்கப்படுமிடத்து நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் ஆக்குவதற்காக ஆதரவளிக்க தயாராகவே உள்ளோம்’

நன்றி: தினகரன்
நன்றி: தினகரன்வாரமஞ்சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *