Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பொகவந்தலாவையில் ‘வி.கே.வெள்ளையன் புரம்’

வி.கே.வெள்ளையன் நூற்றாண்டில் பொகவந்தலாவையில் ‘வி.கே.வெள்ளையன் புரம்’- மயில்வாகனம் திலகராஜ் பா.உ

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துவரும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடனான மலையக இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூன்றாவது தொகுதியான 153 வீடுகளைக்கொண்ட மலைநாட்டு புதிய கிராமமாக இன்று (24) பொகவந்தலாவை, பிரிட்வெல் தோட்டத்தில் பொது மக்களிடம் கையளிக்கப்படுகின்றது. 


மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின்பேரில் இலங்கை ஜனநாயக சோசலிஸ  குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்   தரஞ்சித் சிங்க சந்து ஆகியோரின் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர் அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்  பலர் கலந்து கொள்கின்றனர். 

 ஏற்கனவே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட இந்திய வீடைமைப்புத்திட்டங்களான டன்சினன் வீடமைப்புத் திட்டத்திற்கு ‘மகாத்மா காந்திபுரம்’ என்றும், டயகம வீடமைப்புத்திட்டத்திற்கு ‘ஆபிரஹாம் சிங்கோபுரம்’ என்றும பெயர் சூட்டப்பட்ட நிலையில், பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தில் அமைக்கப்படும் இந்த வீடமைப்புத்திட்டத்திற்கு ‘வி.கே.வெள்ளையன்புரம்’ என பெயரிடப்பட்டுள்ளது. 


தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக  தலைவரான வி.கே.வெள்ளையன் மலையக அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் அரிய பல சாதனைகளின் சொந்தக்காரர். 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பொகவந்தலாவை  முத்துலட்சுமி தோட்டத்தில் வெள்ளையன் காளிமுத்து – பேச்சியம்மா தம்பதிகளின் புதல்வராக பிறந்தவர் வி.கே.வெள்ளையன்.

பொகவந்தலாவை, கெம்பியன் தோட்டப் பாடசாலையிலும்   சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றதோடு,  மெட்ரிகுலோசன் எனும் லன்டன் பரீட்சையில் சித்தி பெறும் வவரை கண்டி, திரித்துவ கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். 


கண்டி திரித்துவ கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமான விடயம். இவர் 1936 ஆம் ஆண்டே அனுமதி பெற்றுள்ளதோடு விளையாட்டிலும், கல்வியிலும், இலக்கியத்திலும் சிறந்த தலைமைத்துவ பண்புகளை காட்டியுள்ளார். கல்லூரியில் கிடைக்கப்பெற்றுள்ள சில ஆவணங்கள் அவரது திறமைகளை அச்சொட்டாக காட்டி நிற்கின்றன. கண்டி திரித்துவ கல்லூரியில் கிரிக்கெட், ஹொக்கி மற்றும் ரகர் ஆகிய விளையாட்டுக்களில் சிறந்து விளங்கியதுடன் ‘ரகர்’ அணி தலைவராகவும் செயங்பட்டுள்ளார்.   ரகர் விளையாட்டுக்கான ‘லயன்’ விருதினைப் பெற்றுகொண்டுள்ள அவர், கிரிக்ககெட் விளையாட்டுக்கான கலர்ஸ்’ விருதும் பெற்றுக்கொண்டவர். அத்துடன் கல்லூரியின் தமிழ் மன்ற செயலாளராகவும், இலக்கிய  மன்றத்தின் பொருளாளராகவும்  செயற்பட்டுள்ளார். 


கல்லூரி மாணவத் தலைவனாகவும்  செயற்பட்ட அவர் சிற்நத தலைமைத்துவ பண்புகளுடன் 1940 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறினார். ஒரு பொலிஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அதற்கு விண்ணப்பித்த போதும் பல திறமைகள் இருந்தும் பிரஜாவுரிமை இல்லாததன் காரணமாக நிராகரிக்கப்பட்டார். அதன் பின்னர், பொகவந்தலாவை, நோர்வூட் ஆகிய பிரதேசங்களில் கூட்டுறவு சங்க முகாமையாளராக பணிபுரிந்தவர் அதிலும் அதிருப்தியுற்றவராக பொதுவாழ்வில் ஈடுபடலானார்.

1939 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய காங்கிரஸின் தலைவர்களான எஸ். சோமசுந்தரம் , கே.ராஜலிங்கம் போன்றோருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. 1942 ஆம் ஆண்டு இலங்கை இந்திய  காங்கிரஸில் இணைந்துகொண்ட வி.கே.வெள்ளையன், பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு மலையக மக்களின் உரிமைக்காக போராடியவர். 


1951ஆம் ஆண்டு குடியுரிமை பறிப்புக்கு எதிரான சத்தியாக்கிரக போராட்டம், 1955 ல் அட்டனில்  நடைபெற்ற சமவுரிமை மாநாடு போன்றன முக்கியத்துவம் வாய்ந்தன. இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு அதன்பொதுச் செயலாளராகவும் வி.கே.வெள்ளையன் செயற்பட்டுள்ளார். எனினும் 1965 ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அதில் இருந்து வெளியேறி தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார் 


1960 ஆண்டு பொதுத் தேர்தலில் ‘இலங்கை ஜனாநாயக காங்கிரஸ்’ எனும் அமைப்பின் ஊடாகவே இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அந்த தேர்தலில் ‘மரம்’ சின்னத்தில் மஸ்கெலியா தொகுதி வேட்பாளராக வி.கே.வெள்ளையன் போட்டியிட்டார். அதற்காக அவர் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் தனது அரசியல் இலட்சியம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர் அவற்றில் ஒன்றாக தோட்டத்  தொழிலாளர்களின் குடியிருப்பு வசதிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த விஞ்ஞாபனத்தில் நாடற்றவர்கள் உன சொல்லப்படுபவர்கள் உண்மையில் இந்த நாட்டு பிரஜைகளே. அவர்களுக்குரிய உரிமைகளை அளித்து நாடற்றவரென்ற அக்கிரமத்தை நீக்குவோம், ஒரு தேசிய சுகதார திட்டத்தை உருவாக்குவோம், தமிழுக்கு உரிய அந்தஸ்து அளித்து அதை ஓர் அரசாங்க மொழியாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருப்பதோடு  எட்டாவது அம்சமாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.. 


‘இன்று 15 லட்சம் பேர்களுக்கு தக்க குடியிருப்பு வசிதிகள் இல்லை. அரசாங்க உதவியுடனும், கூட்டுறவு முறையிலும் வீடமைப்புத்திட்டத்தை துரிதமாக நிறைவேற்றுவோம்’  1960 ஆம் ஆண்டிலேயே அரசாங்கத்தின் உதவியுடன் மலையக மக்களுக்கு தனிவீட்டுத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற கோரிக்கையின் முன்வைத்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரான வி.கே.வெள்ளையனின் கனவை நனவாக்கும் வகையில் அதன் தற்போதைய தலைவர் பழனி திகாம்பரம் வீடமைப்புத்திட்டங்களையும் புதிய கிராமங்களையும் அமைதது வருவது உண்மையில் வி.கே.வெள்ளையன் கண்ட கனவை நனவாக்கும் செயற்பாடாகும். 


இந்த ஆண்டு வி.கே.வெள்ளையன் நூற்றாண்டு காலமாகும். அதனை சிறப்பிக்கும் வகையில் தொழிலாளர் தேசிய சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் ‘மாவலி’ தொழிறசங்க  சிறப்பிதழில் அன்னாரது பல்வேறு சாதனைகளையும் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் அவரது பிறந்த ஊரான பொகவந்தலாவையில் அமையப்பெறும் மலைநாட்டு புதிய கிராமத்துக்கு ‘வி.கே.வெள்ளையன் புரம்’ எனப் பெயரிட்டிருப்பது ஒரு மாபெரும் தலைவனுக்கு செய்யும் மரியாதையாகவும் அமைகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *