Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மலையகத்தில் “ஆத்திர” பர்பரையை உருவாக்கிய இர. சிவலிங்கம்

சமகாலத்தில் இலக்கிய குரலாக மாத்திரமன்றி தமது ஆசிரியத்துவத்தின் ஊடாக அரசியல் செயற்பாட்டில் பங்கேற்ற மலையக ஆளுமையாக இர.சிவலிங்கத்தை அடையாளப்படுத்த முடியும்.17 /05/1932  ல் பிறந்து மலையகத்தில் கிடைத்த கல்வி வாய்ப்புகளூடாக சென்னை தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் பட்டதாரியான இர. சிவலிங்கம் ஆசிரியராக, அதிபராக மலையக பிரதான பாடசாலைகளில், குறிப்பாக ஹட்டன், ஹைலன்ஸ் மத்திய கல்லூரி யூடாக சமூக பிக்ஞை மிக்க மாணவர்  பரம்பரையை உருவாக்கியவர்.
அதுபற்றி அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“1960லிருந்து 1980 வரை ஒரு இருபது ஆண்டு காலம் மலையக இளைஞர்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து பதவிப் பருவம் வரை எடைபோட்டுப் பார்த்த அனுபவம் எனக்குண்டு. பாலையில் விதைத்த பயிர்கள் போல் நல்ல பள்ளிகளற்ற ஒரு சமுதாய அமைப்பில் மலையக இளைஞர்கள் தொடக்கக் கல்வியிலே துவண்டு போனார்கள். ஐந்தாம் வகுப்புக்கு மேல் எங்கு செல்வது என்று தெரியாமல் தோட்டத் தொழிலாளர்களாகவே செக்கு மாடுகள் போல பல தலைமுறைகள் சீரழிந்து விட்டனர். தோட்ட வாழ்வே ஒரு சிறை வாழ்வாக அமைந்து விட்டது. கல்வியின் தாக்கமோ அரசியல் கருத்துக்களின் ஊக்கமோ ஒரு புத்துலகப் போக்கின் நோக்கமோ அற்ற ஒரு சூழ்நிலையில் எத்தனை மலையக மலர்கள் கனியாகாமல் உதிர்ந்தனவோ அதற்குக் கணக்கேயில்லை.

நமது நாட்டின் அரசியல் தலைமைத்துவ வரலாற்றை உற்று  நோக்கில் இலங்கையில் வாழுகின்ற அத்தனை சமுதாயங்களும் எத்தனையோ தலைமைகளை பரீட்சித்துப் பார்த்திருக்கின்றன. மலையக சமுதாயம் பரீட்சை எழுதப் பயப்படும் மாணவனைப் போல மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு ஏமாற்றுத் தலைமையின் கீழ் சிக்கி எதிர்காலத்தை இருள்மயமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இளமை, என்பது இலட்சியம் மிக்க சக்தி, மாற்றம் ஏற்படுத்தத் துடிக்கின்ற பெரும் சக்தி என்ற உண்மை மலையகத்துக்கு நிச்சயமாகப் பொருந்தும்.

“ஒரு முறை நான் ஹட்டனில் இருந்து மட்டக்களப்புக்கு புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக என்னோடு சமசமாஜக் கட்சிப் பிரமுகர்களில் ஒருவரான தோழர் எட்மன்ட் சமரக்கொடியும் பயணம் செய்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது “நீங்கள் மலையகத்துக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டார்” நான் ” படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயக்கம் அமைத்துக் கொண்டிருக்கிறேன்” எனச் சொன்னேன். அதற்கு அவர் “நீங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தொழிலாள வர்க்க இளைஞர்களை ஒன்றிணைத்து இயக்கம் அமையுங்கள்” எனக் கூறினார். இந்தப் பணியை இன்று வரை எவரும் செய்யவில்லை என்ற எனது ஆழ்ந்த துயரம் இப்போதும் வெளிப்படுகிறது.

மலையக மக்கள் முன்னணியின ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான வி.டி. தர்மலிங்கம் சிறையில் இருந்தவாறு எழுதிய “மலையகம் எழுகிறது” நூலுக்கான முன்னுரையிலேயே இர. சிவலிங்கம் தனது ஆதங்கங்களை மேற்கண்டவாறு வரியுறுத்தியுள்றார்.

இர. சிவலிங்கம் இலங்கையில் மாத்தரமல்லாது இந்தியா சென்று அங்கு தாயகம் திரும்பிய மலையக மக்கள் மத்தியில் “மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்” என்ற அமைப்பின் ஊடாக பணியாற்றியவர். அதன்போது  சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்த நிலையில் அவரே சிறையில் இருந்து எழுதிய “சிறை குறிப்புகள் ”  எனும் ஆக்கத்திற்கு மு.நித்தியானந்தன் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள் இவ்வாறு அமைகின்றன.

‘அடிமை இருளில் சிக்கியிருந்த மலையக சமுதாயத்தின் விடுதலைக்காக ஓயாது சிந்தித்துச் செயற்பட்ட பெருமகன் இர.சிவலிங்கம். இருண்ட வரலாற்றின் விளைபொருளாயும் அதே நேரத்தில் அச் சமுதாய மாற்றத்தின் நெம்புகோலாகவும் திகழ்ந்த அறிஞர் அவர்.  நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டிருந்த மலையகத்தின் சமூக வாழ்வில் அறுபதுகளில் ஒரு அசிரியனின் குரல் அட்டனிலிருந்து எழுந்தது. வெங்கொடுமைச் சாக்காட்டில் வீழ்ந்து பட்ட சமூகத்தின் துயரத்தையெல்லாம் சுமந்த ஒரு குரல். ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனட்சாட்சியின் குரல். பரிகசிக்கப்பட்டு இழிந்துரைக்கப்பட்ட தனது சமுதாயத்தின் மேன்மையைப் பாடுவேன் என்று உறுதி பூண்ட குரல். அடிப்படை உரிமைகள் அனைத்துமே மறுதலிக்கப்பட்ட ஒரு சமூகக் கூட்டத்தின் விலங்குகளை ஒடிக்க முனைந்த வீராவேசக் குரல்.

மக்கள் சுபீட்சத்தை மறந்து தமது சுய பிரதிமைகளில் முழுகிப்போன அரசியல் தலைமைத்துவத்தின் கோபுரவாசல்களில் ஆர்ப்பரித்த எதிர்ப்பு குரல். சமூக உணர்வு கொண்ட படித்த இளைஞர்களின் நெஞ்சங்களின் கொதி நெருப்பில் எண்ணெய் வார்த்த குரல். அட்டனில் முரசறைந்த இக் குரல் மலையகத்தின் முகடுகள் எங்கணும் அதிர்வுகளை எழுப்பியது. இந்த குரலின் சொந்தக்காரர் “சிவா” என்றழைக்கப்படும் இர.சிவலிங்கம் ஆவார். அறுபதுகளில் இவரால் ஈர்க்கப்படாத இளைஞர்கள் இல்லை என்று சொல்ல வேண்டும். அறுபதுகளில் மலையகத்தில் ஊற்றுக்கண்டு இன்று சீரிய நதிப் பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கும் எழுச்சியின் மையநாயகனகாக இர.சிவலிங்கம் திகழ்கிறார். மலையக இளைஞர் மத்தியில் இத்தகைய ஈடிணையற்ற ஆளுமையை நிலை நிறுத்திய தனிப் பெருந்தலைமகனாக சிவா திகழ்கிறார்.

பின்னாளில் மலையக இலக்கிய பரப்பில் தன்னை அடையாளப்படுத்திய சாரல்நாடன், கல்விமான்களாகவும், சமூக செயற்பாட்டாளர்களாகவும் இன்றும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எம். வாமதேவன், பேராசிரியர். த. தன்ராஜ் போன்றவர்கள் இவரது மாணவர்களாகும்.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக சாரல்நாடன் எழுதிய “இளைஞர் தளபதி இர. சிவலிங்கம்” (2010) எனும்  நூல் இர. சிவலிங்கத்தின் பங்களிப்பையும் பல்துறை ஆளுமைகளையும் பதிவு செய்துள்ளார். அதில் உள்ளடக்கத்திலேயே கலை இலக்கிய பணியில் எனும் ஒரு அத்தியாயத்தையே எழுதி இருக்கின்றார். அதில் கவிதை, சிறுகதை , நாவல் , கட்டுரை, நாடகம் என கலைத்துறை சார்ந்த விடயங்களிலும் மலையக இளைஞர்களை ஊக்குவித்தல் மன்றங்களை அமைத்து செயற்படல் என அவரது இலக்கிய வழி அரசியல் முனைப்புகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

தனது ஆசிரிய காலத்திலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கு எதிராக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உடன் இணைந்து அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு அதனால் தொழில் இழந்து பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டு தமிழகம் சென்று அங்கும் சிறைவாசம் அனுபவித்து மீண்டும் இலங்கை திரும்பிய அவர் தனது அந்திம காலத்தில் எடுத்த அரசியல் தீர்மானம் பல்வேறு விமர்சனத்திற்கு உட்பட்டது. 9/7/1999  அவர் காலமானபோதும், அவரது தீவிர அரசியல் செயற்பாட்டு காலமான 60 களில் ஒரு “ஆத்திர” பரம்பரயையை மலையகத்தில் உருவாக்கியவர் எனும் பெருமைக்கு உரியவர். அந்த பரம்பரையினர் இன்றும் அவரை நினைவு கூர்ந்து இர. சிவலிங்கம் ஞாபகார்த்த மன்றம் என மன்றம் அமைத்து ஆண்டுதோறும் பல்வேறு ஆளுமைகளின் ஊடாக மலையகத்திக்கு அவசியமான ஆய்வுரைகளை ஏற்பாடு செய்து நடாத்தி அதனை நூலுருவிலும் வெளியிட்டு வருகின்றனர். இர. சிவலிங்கம் எனும் ஆளுமை மலையக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை என்பதை மறுப்பதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *