Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மு.சி.கந்தையாவின் மலையகத் தமிழர்கள்

கோவை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மு.சி.கந்தையாவின் இந் நூல் ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். ஒரு இனம் அதன் வரலாற்றை ஆவணப்படுத்துவதும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் ஒரு சமூகத்தின் வரலாற்றுக் கடமையாகும்.<

அந்த வகையில் இந் நூல் மலையகத் தமிழர்களின் வருகையுடனான ஆரம்ப வரலாற்றை பெருந்தோட்ட உற்பத்தியுடனான அவர்களது உழைப்பை, இருப்பை, இழப்புக்களை வரலாற்றுச் சான்றுகளுடன் ஆவணப்படுத்துகிறது.

அதற்கான தேடுதலிலும் உழைப்பிலும் நூலாசிரியர் தன்னை எந்த அளவு ஐக்கியத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பதற்கான சான்றாகத் திகழ்கிறது இந் நூல்.

ஈழத்தமிழர்களைப் பற்றி மட்டும் அறிந்திருக்கும் தமிழகத்து மக்கள் மலையக மக்கள் பற்றியோ தமிழகத்தில் 1966 ஆம் ஆண்டுக்குப் பின் குடியமர்த்தப்பட்ட பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழ் மக்கள் பற்றியோ அறிந்திருக்கவில்லை. அறிந்து கொள்ளவும் முயலவில்லை என்னும் ஆதங்கம் நூலில் விரவிக் கிடப்பதைக் காணலாம்.

பெருந்தோட்டத்துறை உற்பத்தி மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் இந்த மலையகத் தமிழ் மக்கள். இலங்கையின் நிலவுடைமை சமூக அமைப்பைத் தகர்த்து முதலாளித்துவ உற்பத்தி உருவாக்கத்துக்காக மிகப்பெரிய உழைப்பை வழங்கிய இவர்களுக்கு இரண்டு நூற்றாண்டுகால வரலாறுண்டு என்பதை இன்றைய உலகத்தமிழ் சமூகத்துக்கு “சிதைக்கப்பட்ட மலையகத்தமிழர்கள்” என்னும் இந்நூல் இவர்களும் இலங்கையின் தேசிய இனமே என்பதை வரலாற்று ஆவணங்களுடன் உறுதி செய்கின்றது.

கடந்த இரு நூற்றாண்டுக் காலப்பரப்பில் இச் சமூகத்தின் மீது ஏவப்பட்ட சித்திரவதைகள், அடக்குமுறைகள், 1958 ஆம் ஆண்டிலிருந்து நிகழ்த்தப்பட்ட இன வன்முறை, வடக்கு – கிழக்கு பிரதேசங்களுக்கு வாழ்வு தேடிச்சென்றமை, தொழிற்சங்கத் துரோகங்கள் எனத் தொடரும் பட்டியல் மிக நீண்டது.

அந்த மூலங்களின் வேர்களை தர்க்கவியல் பார்வையுடன் தேடிக்கண்டறிய தனது பேருழைப்பை நல்கியுள்ளார் நூலாசிரியர் மு.சி.கந்தையா என்று தனது முன்னுரையின் குறித்துச் செல்கின்றார் சி.பன்னீர்செல்வம். இந் நூல் 3 பெரும் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

வரலாற்றுணர்வுடன் இம் மக்கள் குடியேறத் தொடங்கிய ஐரோப்பியர் கால ஆரம்பமான 1817—1920 ஆம் ஆண்டு வரையிலான காலம் முதல் பகுதியாகவும் 1920–1970 ஆம் ஆண்டு வரையிலான காலம் இரண்டாம் பகுதியாகவும் 1970 ஆம் ஆண்டு க்குப் பின்னான வரலாறு மூன்றாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு பகுதியும் 10 க்கும் 15 க்கும் இடையிலான உபதலைப்புக்களுடன் அந்தக்கால வரலாற்றையும் முக்கியமான நிகழ்வுகளையும் வரலாற்றுத் தவறுகளையும் ஆவணச் சான்றுகளுடனும் விவாதங்களுடனும் பதிவு செய்கின்றது.

எல்லாப் பதிவுகளுமே இலங்கையின் தமிழினம் பொதுவாகவும் மலையகத் தமிழினம் குறிப்பாகவும் சிதைக்கப்பட்ட, படுகின்ற வரலாற்றைச் சுற்றியே விரிகின்றன. நூலின் தலைப்பும் அதுதான். நூலாசிரியரின் நோக்கமும் ஆதங்கமும் கூட அதுதான்!

போர்த்துக்கேயர் காலத்தை விட பிரிட்டிஷாரின் காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமாரின் வருகை அதிகரித்திருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் “அமெரிக்கன் சிலோன் மிஷன்” போன்ற அமைப்புக்கள் தென்பகுதிகளிலும் வடக்கின் கரையோரப் பகுதிகளிலும் கல்விக் கூடங்களை உருவாக்கியதுடன் மத பரப்புரைகளிலும் மதமாற்றத்திலும் ஈடுபட்டன.
இவ்வாறான செயற்பாடுகளுக்கெதிராக கொழும்பு போன்ற பகுதிகளில் “பௌத்த மறுமலர்ச்சி” என்னும் அமைப்பு செயற்பட ஆரம்பித்தது. மறுமலர்ச்சி இயக்கத்தை வழி நடத்திய அநகாரிக தர்மபால இலங்கை அரசாலும் பௌத்த மதத்தினராலும் உயர்ந்த தேசியவாதியாகவும் உன்னத மனிதராகவும் போற்றப்படுபவர்.

மத வன்முறைப் பரப்புரைக்கு சொந்தக்காரர் என்ற மகுடத்தைத் தாங்கிய முதல் மனிதர் என்பதால் தான் இப் போற்றுதலும் நினைவுகூர்தலுமாகும். இலங்கையில் பௌத்த சமயம் சமூக தளத்திலும் அரசியல் தளத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தைக் கொண்டுள்ளமைக்கு அநகாரிக தர்மபாலவுக்கு மிகப்பெரும் பங்குண்டு. இலங்கை அரசியல் களத்தில் பௌத்த துறவிகளின் தீவிர செயற்பாடுகள் எதுவித தடைகளுமின்றி இன்றுவரையும் தொடர்கிறது.

“ஆங்கிலேயர் நிர்வாகத்தில் தென்னிந்தியாவின் கீழ் சாதியினர் எமது தீவில் குடியேற அனுமதிக்கப்படுகின்றனர்” என்று மலையகத் தமிழர்களுக்கெதிராக சாதிய வன்மத்தை கக்கத் தொடங்கியவரும் இவரே. இவ்வாறான சொல்லாடல்களே மலையகத் தமிழர்களுக்கெதிரான இனவாதமாக உருவெடுத்தது. (பக்.83)

“இந்நூலை எழுதுவதற்கு என்னைத் தூண்டிய புறநிகழ்வுகள் பல. இதில் மலையகத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் வரலாற்று நூல்களும் அடக்கம். அவற்றில் காணும் வரலாற்று முரண்பாடுகள், ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகள், கபடத்தனம், வஞ்சிக்கும் மனோபாவம் கொண்ட அரசியல்வாதிகள், மலையக மக்களின் வலிமையை சரியான சூழலில் கையாளத்தவறிய தலைமை, இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடரும் கொத்தடிமை தொழில்முறை, ஜனநாயக உரிமை மறுப்பு, இரண்டாந்தர குடிமக்கள் நிலைமை, தொடரும் இன மேலாதிக்கம் போன்றவையே இந்நூல் உருவாக மையக்காரணம் எனலாம். நூலில் இணைக்கப்பட்டுள்ள ஆவணச் சான்றுகளின் நகல்கள் நூலின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. என்னால் இயன்றளவு தேடலிலும் இதைத் தொகுப்பதிலும் எனது ஆற்றலை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கின்றேன்” என்கிறார் இந் நூலாசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *