Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மூன்று ஒப்பந்தங்களில் சிக்கித்தவிக்கிறது சம்பள விவாகாரம்: முறைமைப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும்.

  • சபையில் பிரேரணை முன்வைத்துதிலகராஜ் எம். பி உரை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்த முறைமையானது சிக்கல் நிறைந்ததாக காணப்படுகின்றது. ஒரு புறம் சம்பளத்தை தீர்மானிக்கும் ஒப்பந்தம் முதலாளிமார்சம்மேளனத்துடன் செய்யப்படும் அதேவேளை தோட்டத் தொழிலாளர்களிடம் நேரடியாக அவுட்குரோவர் முறைக்கான ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. அதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக இன்னுமொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படுவதாக சொல்லப்படுகின்றது. எனவே மூன்று ஒப்பந்தங்களில் சிக்கித் தவிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் தனது தலையீட்டை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையில் அரசாங்கத்தின் மத்தியஸ்த்தத்தை வலியுறுத்தி நேற்று முன்தினம்(08ஃ01) அவர் முன்வைத்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையினை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடெங்கும் பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவை உண்ணாவிரத பேராட்டங்களாகவும் அமைகின்றன. தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருப்பதால் இது ஒரு சமூக பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கின்றது. கடந்த இரண்டு மாத காலமாக நிலையான ஒரு அரசாங்கம் இல்லாத நிலையில் இந்தப்பிரச்சினையில் அரசாங்கத்தின் கவனம் குறைவாக இருந்த நிலையில் தற்போது அரசாங்கம் அமையப்பெற்றுள்ள நிலையில் தொழில் அமைச்சர் இந்தப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்த பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

எம்மை வாக்களித்து இந்த பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்கள் தமது சம்பள விவகாரம் தொடர்பாக இங்கே விவாதிக்கப்பட்டு தீர்மானிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு கொள்கின்றனர். எனினும் தோட்ட முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் கூட்டு ஒப்பந்த முறைமையில் இந்த பாராளுமன்றத்திற்கு வெளியே தீர்மானித்துக்கொள்வதனால் பாராளுமன்ற செயற்பாடுகளால் முழுமையாக சம்பள விடயத்தில் செயற்பட முடியாதுள்ளது. எனினும், பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவாகும் அமைச்சர்கள் அரசாங்கம் என்கின்ற வகையில் இதில் பொறுப்புடன் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகவுள்ளது.

2016 ஆம் ஆண்டும் நான் இத்தகைய பிரேரணை ஒன்றை முன்வைத்து அரசாங்கத்தின் தலையீட்டை கோரியிருந்தேன். ஆனாலும் அறிவு பூர்வமாக இந்த விடயங்களை முன்வைத்து அதற்கு தீர்வு காண முற்படும்போது உணர்ச்சிபூர்மான கருத்துகளை முன்வைத்து ஊடக கவனத்தைப் பெற்று விடுவதனால் அவை திசை திருப்பப்பட்டுள்ளன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு எனது பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றிய அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பெற்றோலைக் கொண்டு வருகிறேன். தன்னை தீமூட்டிக்கொள்வேன் என்றதும் ஊடகங்களினதும் பாராளுமன்றத்தினதும் கவனம் அதன் மீது சென்றதே தவிர பிரேரணையில் கூறப்பட்ட விடயங்கள் பேசுபொருளாகவில்லை. எனவே உறுப்பினர்கள் உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்து இதனை கேலிக்கு உள்ளாக்காமல் அறிவுபூர்வமாக இந்த விவாதத்தில் கருத்துக்களை பகிருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த கால வரலாற்றை எடுத்துபார்த்தால் 1998 முதல் 2016 வரை வேறுபட்ட வீதங்களில் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. அது 6 சதவீதமாகவும் 40 சதவீதமாகவும் கூட அமைந்து காணப்படுகின்றது. இப்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அடிப்படை சம்பளத்தை 1000ரூபாவாக பெற்றுக்கொடுப்பதாக அளித்துள்ள வாக்குறுதியானது 100வீதம் அதிகரிப்பாக உள்ளது. எனவே ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமானது தொழிலாளர்கள் பக்கத்தில் நியாயமான சம்பளமாக பெற்றுக்கொடுக்கக்கூடிய தொகையாக உள்ளபோதும் கூட 100 வீத அதிகரிப்பு நியாயமற்றதாக காட்டுவதற்கு முனைப்பு காட்டப்படுகின்றது.

எனவே தொழில் அமைச்சர் இந்த விடயத்தில் தலையிட்டு இரண்டாண்டுக்கு ஒரு முறை நிலையான வீதத்தில் அடிப்படைச் சம்பளத்தை தீர்மானிக்க தலையீடு செய்ய வேண்டும். தவிரவும் இந்த ஒப்பந்தமானது ஆங்கில மொழியில் மாத்திரம் அமைந்துவிடுவதனால் அதன் பயனாளிகளான மக்களுக்கு ஒப்பந்தம் தொடர்பாக போதிய தெளிவு இல்லை. எனவே இது தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் ஒப்பந்த காலத்திலேயே வெளியிடப்படல் வேண்டும் என்பதையும் தொழில் அமைச்சு வலியுறுத்த வேண்டும்.

மிக முக்கியமாக இந்த கூட்டு ஒப்பந்த முறையில் சில சரத்துக்கள் பேரளவில் சம்பள அதிகரிப்பைத் தருவதாக தயாரித்து விட்டு உள்ளே அந்த சம்பளம் கிடைக்க முடியாதவாறான சரத்துகள் சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக 75 சதவீத வரவுபதிவு செய்தால் மாத்திரமே அவர்கள் வேலை செய்யும் அத்தனை நாளுக்குமான 60 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கும் என்பதாகும். இது அவ்வாறு அமையாதவாறு தொழிலாளர்கள் முகாமை செய்யப்படுகிறார்கள். அதேபோல அவர்களது தொழில் திறன் அடிப்படையில் வழங்கப்படுவதாக சொல்லப்படும் 140 ரூபாவும் இந்த வேலைநாள் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்படுவதனால் ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்படும் தொகையைவிட மிகக்குறைந்த வருமானமே அவர்களுக்கு கிடைக்கின்றது.

இவற்றுக்கு மேலதிகமாக ‘அவுட்குரோவர்’ முறை எனும் முறைக்கு தொழிலாளர்களுடன் நேரடியான ஒப்பந்தங்களில் கம்பளிகள் ஈடுபடுவதனால் தொழில் சட்டங்களை மீறுகின்ற வகையில் சம்பள கட்டமைப்பு மாறுகின்றது. இந்த அவுட்குராவர் முறைக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடந்த முறை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக இன்னுமொரு ஒப்பந்தம் இந்த தரப்பினரிடையே செய்யப்படுவதாகவும் ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஆதாரமும் என்னிடம் உள்ளது.
எனவே மூன்று ஒப்பந்தங்களுக்குள் சிக்கித்தவிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தொழி;ல் அமைச்சு கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. அதனை நிறைவேற்ற வேண்டும் என எனது பிரேரணை ஊடாக முன்வைக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *